பெங்களூரு: கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காவிரி, மேகதாது மற்றும் மகாதாயி நீர் பிரச்னைகள் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 23) அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. விதான் சவுதாவில் உள்ள ஆலோசனை அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி கூறுகையில், “கர்நாடகா மற்றும் கேரளா எல்லையில் உள்ள காவிரி பள்ளத்தாக்கில் பொழிய வேண்டிய தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் 2023 - 2024 ஆண்டு கடினமான ஆண்டாக இருக்கும். காவிரி நீர் கட்டுப்பாட்டு கமிட்டி ஜூன் வரையில் பெய்யாத மழையின் அளவை கவனித்து உள்ளது. கடந்த ஆகஸ்ட் 10 அன்று கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
இதனை கர்நாடகா கடுமையாக எதிர்த்தது. இதனையடுத்து 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் வேதனை அடைந்த தமிழ்நாடு, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இது தொடர்பான விசாரணை வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட அமர்வின் முன்பு வர உள்ளது” என தெரிவித்தார்.