நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றப்பட்டு எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துவந்தன. இதனிடையே கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சில மாதங்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவந்தன.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தவரையில் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபரில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் ஒரு டாலர் வரை குறைந்துள்ளது.
இதைப்பற்றி இந்தியன் ஆயில் தலைவர் எஸ்.எம். வைத்யா கூறுகையில், பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் இது சிறிய மாற்றம்தான் என்றார்.
இதனால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த மாதமாக எவ்வித மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. கடந்த 41 நாள்களாக பெட்ரோல் விலையும், 30 நாள்களாக டீசல் விலையும் மாற்றமடையாமல் உள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை 81.06 ரூபாயாகவும், மும்பை, சென்னை, கொல்கத்தாவில் முறையே ரூ.87.74, ரூ.84.14, ரூ.82.59 என விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலை டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் ரூ.70.46, ரூ.76.86, ரூ.75.95, ரூ.73.99 என விற்பனை செய்யப்படுகிறது.
ஊரடங்கிற்கு பின்னர் படிப்படியாக பொருளாதார நடவடிக்கைகள் முன்னேறிவருகின்றன. மேலும் பண்டிகை காலம் என்பதால் மக்களும் ஓர் அளவிற்கு வெளியே வரத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. இதனால் இந்த ஆண்டில் முதல்முறையாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் தேவை அக். மாதத்தின் முதல் இரு வாரங்களில் ஒன்பது விழுக்காடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்நேரம் ராகுல் பிரதமராக இருந்தால், கோவிட் இறப்பு அதிகமாக இருக்கும்”- அமைச்சர் பேச்சு