தான்பட்: ஜார்கண்ட் மாநிலத்தின் தான்பட் மாவட்டத்தில், தான்பட் ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட காத்ராஸ் ரயில் நிலையம் அருகே ரயில்வே பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் சிலர், மின் கம்பம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த உயர் அழுத்த கம்பியில் மின் கம்பம் மோதியதால், அதில் மின்சாரம் பாய்ந்து உள்ளது.
இவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 5 ரயில்வே ஒப்பந்த பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து அறிந்த மண்டல ரயில்வே மேலாளர் கமல் கிஷோர் சின்ஹா உள்பட ரயில்வே ஊழியர்கள், மீட்புப் படையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இந்த சம்பவமானது ஹவுரா - புது டெல்லி ரயில்வே வழித்தடத்தில் உள்ள தான்பட் கோமோ அருகே இருக்கும் நிசித்பூர் ரயில்வே கேட் அருகில் இருந்த மின்சார கம்பியில் இருந்து 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தால், பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.