தான்பட் (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட் மாநிலம் தான்பட் மாவட்டத்தின் ஜாரியா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன், கடந்த 1994ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி பள்ளி முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தான். இந்தியன் ஸ்கூல் ஆஃப் லேர்னிங் என்ற பள்ளியில் இருந்து ஜாரியாவில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சிறுவனை 3 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கடத்தி உள்ளது.
இந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்த அம்பாசிடர் காரில் சிறுவனை கடத்திச் சென்று, சிறுகுண்டா ஆற்றுக்கு அருகில் கொண்டு வந்து உள்ளனர். பின்னர், சிறுவனை காரில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்து உள்ளனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தையான ஷாரஃபாத் ஹூசைன், அருகில் உள்ள ஜாரியா காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சிறுவனின் தந்தை அளித்த புகாரின்படி, சிறுவனை விடுவிக்க கடத்தல் கும்பல் 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளதாகவும், ஆனால் அந்த பணத்தை சிறுவனின் தந்தை கொடுக்காததால் சிறுவனை கொலை செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பின்னர், இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்பட்ட முன்னா என்ற முஸ்தாக், லதான் வாஹித் என்ற நான்ஹே மற்றும் அஃப்தாப் ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு தான்பட் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.