இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாய சமூகமாக இருந்த வேளாளர் சமூகத்தின் மிக நீண்ட ஆண்டு கால கோரிக்கை, குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியான் என்ற ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று ஒற்றைப் பெயரில் அழைக்க, அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பதாகும். ஞாயமான இந்த கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்து, சந்திக்க நேரம் கேட்ட பொழுதெல்லாம் மறுக்காமல் அனுமதி தந்து, அரசாணை வெளியிட வேண்டுமென்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், கோரிக்கை நிறைவேற காரணமாக இருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தேவேந்திர குல வேளாளர் அரசாணை கோரிக்கை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது நிறைவேற்றப்படும் என்று பிரதமர் மோடியும் நேற்று சென்னையில் நடந்த அரசு விழாவில் அறிவித்துள்ளார். இது தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பிரதமர் மோடிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.