டெல்லி: இந்தியாவில் 69% விழுக்காடு மக்கள் மத்திய அரசால் அனுமதியளிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு தயக்கம் காட்டுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 55% விழுக்காடு சுகாதார வல்லுநர்களும் கரோனா தடுப்பூசியை உடனடியாகப் பெறுவதில் தயக்கம் காட்டுகிறார்கள். 26 விழுக்காடு பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கரோனா தடுப்பூசி பக்க விளைவுகள், சோதனைகளின் செயல்திறன் ஆகியவையே பொதுமக்கள் தடுப்பூசியை எடுக்க தயங்குவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளது.
தடுப்பூசி அனுமதி
இந்தியாவில் 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.இதனை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டுவர மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் இந்தியாவில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளார்களா? என்பது குறித்து லோக்கல் சர்க்கிள் எனும் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வளித்த அதிர்ச்சி
நாட்டில் 69% விழுக்காடு பேர் கரோனா தடுப்பூசி எடுக்க தயக்கம் காட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பொதுமக்கள் பார்வையில் எப்படி உள்ளது? அவர்கள் தடுப்பூசி எடுத்து கொள்ள தயாராக இருக்கிறார்களா? இல்லை தயக்கம் காட்டுகிறார்களா? என அக்டோபர் மாதம் முதல் பொதுமக்களிடம் லோக்கல் சர்க்கிள் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது.
கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் உங்கள் அணுகுமுறை என்னவாக இருக்கும்? என்று 8,723 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் 26 விழுக்காடு பேர் மட்டுமே தடுப்பூசி கிடைத்தவுடன் அதைப் போட்டுக்கொள்வோம் என்று கூறியுள்ளனர்.
ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் கரோனா தடுப்பூசி - சமாஜ்வாதி பகீர்!
அக்டோபரில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, கரோனா தடுப்பூசி எடுக்க தயங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 61 விழுக்காடு இருந்தது. தடுப்பூசி தயாரிப்பாளர்களான ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவன தடுப்பூசிகளின் செயல்திறன் முடிவுகளில் வெற்றியை அறிவித்ததால், நவம்பர் கணக்கெடுப்பில் தடுப்பூசி எடுக்க தயங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 59 விழுக்காடு குறைந்தது.
குழப்பத்தில் மக்கள் மனநிலை
இச்சூழலில் கோவாக்சின், கோவிஷீல்ட் சீரம் தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் லோக்கல் சர்க்கிள் டிசம்பரில் நடத்திய ஆய்வில், தடுப்பூசி எடுக்க தயங்கிய மக்களின் மனநிலை 59 விழுக்காட்டிலிருந்து 69 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு இடையில் லோக்கல் சர்க்கிள் நடத்திய ஆய்வில் தடுப்பூசி எடுக்க தயங்கிய மக்களின் விகிதம் 69 சதவீதம் பேர் என அப்படியே மாறாமல் உள்ளது.
கரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள், சோதனைகளின் செயல்திறன், இந்த தடுப்பூசிகள் குறித்து போதிய தெளிவின்மை, வெளிப்படை தன்மை இல்லாதது ஆகியவையே பொதுமக்கள் தடுப்பூசியை எடுக்க தயங்குவதற்கான முக்கிய காரணங்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.