டெல்லி:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் கூட்டத்தொடரின் 11வது நாளான இன்று (டிச.14), மாநிலங்களவையில் நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான டெரிக் ஓ பிரையன் பாதுகாப்பு மீறல் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என கோரினார். மேலும், நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் வந்து, அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என டெரிக் வலியுறுத்தினார்.
இதனையடுத்து மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் சபையை விட்டு வெளியேறும்படி கூறினார். ஆனால் டெரிக் வெளியேறாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார். அவருடம் சேர்ந்து மற்ற உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த கூட்டத்தொடர் முழுவதிலும் டெரிக் ஓ பிரையன் சஸ்பபெண்ட் செய்யப்பட்டார். முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டத்தொடரில் இருந்தும் டெரிக் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.