டெல்லி: டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஷ்ரத்தாவின் காதலன் அஃப்தாப், அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஃபிரீசரில் வைத்து பிறகு வனப்பகுதியில் வீசினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் வெளியானது முதலே அதே பாணியில் பல கொலைகள் நாடு முழுவதும் நடந்தன.
இந்த நிலையில், அதே போல மற்றொரு கொலைச் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. இன்று(பிப்.14) டெல்லியில் நஜஃப்கரில் தாபா ஒன்றின் ஃபிரீசரில் இருந்து 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த இளம்பெண் டெல்லி உத்தம் நகரைச்சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
அந்த இளம்பெண் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாபா உரிமையாளர் சாஹில் கெலாட் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.