டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 10வது நாளான நேற்று (டிச.13) நடைபெற்ற பூஜ்ஜிய நேரத்தில், மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் திடீரென குதித்தனர். மேலும், அவர்கள் இருவரும் உறுப்பினர்களின் மேசை மீது தாவி ஓடினர். அது மட்டுமல்லாது, அவர்கள் கையில் வைத்திருந்த குப்பியில் இருந்து மஞ்சள் நிற வாயுவும் வெளிவந்தது. மேலும், அவர்கள் கோஷமும் எழுப்பினர்.
இதனை சற்றும் எதிர்பாராத உறுப்பினர்கள், அவர்கள் இருவரையும் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்ற வளாகத்தில் பெண் உள்பட இருவர் நிறங்கள் கொண்ட வாயுவை வெளியேற்றியது மட்டுமல்லாமல், கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் அவர்களையும் காவல் துறையினர் பிடித்தனர்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், “அவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த இருவர், தங்கள் கைகளில் குப்பிகளை வைத்திருந்தனர். பின்னர், அதில் இருந்து மஞ்சள் நிற கேஸ் வெளியானது. இது மக்களவையின் பாதுகாப்பு மீறல் ஆகும். எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் பிரமுகர்கள் தங்களது கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இதன்படி, மக்களவை பொதுச் செயலாளர், இந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.