டெல்லி: பாஜக தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
ஈரான், கத்தார், குவைத், சவூதி அரேபியா ஆகிய வளைகுடா நாடுகள் ஆளும் பாஜக கட்சி நிர்வாகி நூபுர் ஷர்மா கூறிய கருத்துக்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி, இது குறித்து விளக்கம் கேட்டு இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பியது.
நூபுர் ஷர்மாவின் கருத்து சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக தலைமை உத்தரவிட்டது.
இந்தநிலையில், கடந்த மே 28ஆம் தேதி நூபுர் ஷர்மா தனக்கு பல்வேறு நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாகக் கூறி, டெல்லி காவல் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து இன்று (ஜூன் 6) அரசியலமைப்பு சட்டப்பிரிவு 153 ஏ, 506 , 507, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பாஜக மற்றொரு நிர்வாகி நவீன் குமார் ஜிண்டால் நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ட்விட்டர் பதிவு செய்ததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி பாஜக நடவடிக்கை மேற்கொண்டது. சம்பந்தப்பட்டவர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுத்தாலும், அரபு நாடுகள் இதை தீவிரமாக கண்காணித்து வருகிறது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நபிகள் நாயகம் சர்ச்சை: இந்திய தூதரகத்திற்கு வளைகுடா நாடுகள் கண்டனம்