டெல்லி :பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் திகார் சிறையில் உள்ள யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை வழங்கக் கோரிய என்.ஐ.ஏ.வின் மேல்முறையீட்டு மனுவில் பதிலளிக்குமாறு யாசின் மாலிக்கிற்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் யாசின் மாலிக். ஜம்மு காஷ்மீருக்கு தனி நாடு அந்தஸ்து கோரி யாசின் மாலிக் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். மேலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியது, மும்பை தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் யாசின் மாலிக் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டமான உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ விசாரித்த வந்த நிலையில், அந்த அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைதான யாசின் மாலிக்கை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
யாசின் மாலிக் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அவருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. டெல்லியில் உள்ள திகார் சிறையில் தற்போது யாசின் மாலிக் அடைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக்கிற்கு மரண தண்டனை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ மனுத் தாக்கல் செய்து உள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்த நிலையில், என்.ஐ.ஏ தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா, யாசின் மாலிக் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார் என்றும் இந்த வழக்கை அரிதான வழக்காக கருதி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.