டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அம்மனுவில், "நான் ஒரு புற்றுநோயாளி. அதற்காகத் தற்போது நோயெதிர்ப்புத் தன்மையை மேம்படுத்தும் சிகிச்சை எடுத்துவருகிறேன். எனது மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல வேண்டி உள்ளது.
அதற்கு கரோனா இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்வது அவசியம். ஆனால், நான் ஒரு தவணை கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே செலுத்தியுள்ளேன். இரண்டாவதாக கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டபோது, எனக்கு ஒவ்வாமைப் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் நான்கு நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றேன்.
அப்போது, எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், இரண்டாவது தவணை கோவாக்சின் எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைத்தார். அதன்படி நான் தற்போது இரண்டாவது தவணைக்காக 'கோவின்' தளத்தில் மருத்துவரின் பரிந்துரையுடன் பதிவுசெய்ய முயலுகையில், இணையதளம் என் பரிந்துரையை ஏற்க மறுக்கிறது.