டெல்லி: யமுனை ஆறு இன்று (ஜூலை 13) 208.48 மீட்டர் நீர் மட்ட உயரத்தை எட்டியது. வெள்ள அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நிலைமையைச் சமாளிக்க "போர்க்கால அடிப்படையில்" டெல்லியில் உள்ள பொதுப்பணித்துறை செயல்படத் துவங்கியுள்ளது. பழைய ரயில்வே பாலத்தின் அருகே காலை 8 மணியளவில் பதிவான நீர்மட்டம் 207.49 மீட்டர் ஆகும். இது 45 ஆண்டுகளுக்கு முன்பு உருவான வெள்ளப்பெருக்கு நீர் மட்டத்தைவிட அதிகமாகும். இதனால் ஆற்றின் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புதன்கிழமை (ஜூலை 12) அதிகாலை 4 மணியளவில் நீர்மட்டம் 207 மீட்டரைத் தாண்டியது. தொடர்ந்து இரவு 11 மணிக்குள் 208.08 மீட்டரைத் தாண்டியது. இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் மத்திய நீர் ஆணையம் (Central Water Commission) இதை ஒரு "தீவிர சூழ்நிலை" என வகைப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு மணி நேரமும் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், டெல்லி காவல்துறை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுத்து, உயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் 144 தடை உத்தரவை விதித்துள்ளது.
நகரின் அரசு நிர்வாகம், தாழ்வான பகுதிகளில் இருந்து 16,500-க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளது. விழிப்புணர்வு மற்றும் மீட்புப் பணிகளில் 45 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் பழைய ரயில்வே பாலம் மூடப்பட்டுள்ளது. ஓக்லா தடுப்பணையின் அனைத்து மதகுகளில் இருந்தும் உபரி நீரை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது.
வெள்ள அபாயங்கள் குறித்து ஆய்வு செய்ய, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (Delhi Disaster Management Authority) கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணைநிலை ஆளுநர் விகே சக்சேனா இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, டெல்லி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலை மற்றும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறப்பதை மெதுவான வேகத்தில் ஒழுங்குபடுத்துமாறு டெல்லி முதலமைச்சர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "நாட்டின் தலைநகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள செய்தி உலகிற்கு நல்ல தகவலாக இருக்காது. இந்த நிலையில் இருந்து டெல்லி மக்களை நாம் அனைவரும் ஒன்றாகக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.
மேலும், "யமுனையில் இரண்டு பெரிய தடுப்பணைகள் உள்ளன. ஆனால், டேராடூனில் உள்ள தக்பதர் மற்றும் டெல்லியின் மேல்பகுதியில் உள்ள யமுனாநகரில் அமைந்துள்ள ஹத்னிகுண்ட் ஆறுகளில் அணைகள் இல்லை, எனவே, பருவமழையின் போது பெரும்பகுதி நீர் தேக்கி வைக்கப்படாமல் உள்ளது. இதன் விளைவாகத்தான் பருவ மழை காலத்தில் வெள்ளம் ஏற்படுகிறது" எனவும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்... அமித்ஷாவுடன் சந்திப்பு.. டெல்லி விரைந்த குழு!