டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் வெடித்த விபத்தில், யாத்ரீகர்கள், விமானி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்தது எப்படி? என்பதை நேரவரிசையில் விரிவாகப் பார்ப்போம்...
ஹெலிகாப்டர் புறப்பாடு:ஹெலிகாப்டர் நேற்று(அக்.18) காலை 11.30 மணிக்கு, குப்த்காஷியில் இருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. 11.39 மணிக்கு கேதார்நாத்தைச் சென்றடைந்தது. அங்கு பக்தர்களை இறக்கிவிட்டு, ஹெலிகாப்டர் மூன்று நிமிடம் காத்திருந்தது. பிறகு அங்கிருந்து 6 யாத்ரீகர்களை ஏற்றிக் கொண்டு 11.42 மணிக்கு குப்த்காஷிக்கு திரும்பியது.
புறப்பட்ட ஒரு நிமிடத்தில் விபத்து:குப்த்காஷிக்கு புறப்பட்ட ஒரு நிமிடத்தில், அதாவது சரியாக 11.43 மணிக்கு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் வெடித்து பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்து கேதர்நாத் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் நடந்தது.
ஆறு யாத்ரீகர்கள் உயிரிழப்பு:இதில் விமானி மற்றும் தமிழ்நாடு, குஜராத்தைச் சேர்ந்த 6 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று யாத்ரீகர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தில் விமானி உள்பட 7 பேர் பலியாகினர்.
பனிமூட்டமே காரணம்: அடர்ந்த மூடுபனியே விபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிலரது உடல்கள் எரிந்ததாகவும், சிலரது உடல் பாகங்கள் துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து அறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணியில் சிக்கல்: மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்திற்கு விரைவாகச் சென்றாலும், சிறிது நேரத்தில் அங்கு மழையும், பனியும் பொழியத் தொடங்கியது. இதனால் உடல்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டது.