ஔரங்காபாத்: பீகார் மாநிலம், ஔரங்காபாத் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வந்த் சிங் என்பவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் பல்வந்த் சிங் தோல்வியடைந்தார். தனது மிகப் பெரிய தோல்விக்கு தலித்துகளே காரணம் என அவர் எண்ணியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பல்வந்த் சிங், பட்டியலின இளைஞர்களை பிடித்து கம்பியால் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
வாக்களிக்காததால் தண்டனை
மேலும் இரண்டு பட்டியலினத்தவரை பிடித்து தோப்புக்கரணம் போடுமாறு தண்டனை கொடுத்துள்ளார். முன்னதாக பல்வந்த் இருவரையும் காதுகளைப் பிடித்து உட்கார வைத்தபோது, யாரோ ஒருவர் முழு செயலையும் காணொலியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளார். காணொலி வைரலானதை அடுத்தே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.