டெல்லி: சமீபத்தில் நடந்த இந்திய ராணுவம் - சீனாவின் மக்கள் விடுதலைப் படையினர்(PLA) இடையேயான தாக்குதலில் மக்களவை - மாநிலங்களவைகளில் நிலவிய அச்சத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் போக்கியுள்ளார். மேலும், எல்லையைக் காக்க இந்திய ராணுவம் எந்த எல்லைக்கும் செல்லும் என மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இந்தத் தாக்குதல்களில் இருதரப்பிலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால், எந்த ராணுவ வீரரும் உயிரிழக்கவோ, அல்லது மோசமான படுகாயமோ அடையவில்லை என்பதை இந்த அவைக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். சரியான நேரத்தில் இந்திய ராணுவம் செயல்பட்டதால் சீனாவின் PLF படையினர் விரட்டியடிக்கப்பட்டனர். கடந்த டிச.9, யாங்ஸ்டே பகுதியில் உள்ள எல்லையை சீனாவின் மக்கள் விடுதலைப் படையினர் கடக்க முயன்றனர்.
ஆனால், அதை நமது ராணுவப் படையினர் சரியாக எதிர்கொண்டு தடுத்துவிட்டனர். இந்தத் தாக்குலில் நம் நாட்டின் சில வீரர்களும் காயமடைந்துள்ளனர். ஆனால், அச்சப்படும் அளவிற்கு எவரும் படுகாயமடையவில்லை. இந்த விவகாரத்தை சீனாவிடமும் சுமூக முறையில் கொண்டு சேர்த்துள்ளோம். இதன் மூலம் நம் நாட்டு எல்லையைக் காக்க நம் ராணுவம் எந்த எல்லைக்கும் போகும் என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என மக்களவையில் தெரிவித்தார்.