தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை : விவசாயிகளின் தூதுக்குழுவை சந்திக்கவுள்ள அமித் ஷா! - farmers to meet Shah

டெல்லி: நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டங்களை முடிவிற்கு கொண்டுவர போராட்டக் குழு தலைவர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Deadlock continues even as farmers to meet Shah
ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை : விவசாயிகளின் தூதுக்குழுவை சந்திக்கவுள்ள அமித் ஷா!

By

Published : Dec 8, 2020, 10:11 PM IST

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களான அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) சட்டம் 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம் 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்றையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் மாதத்திலிருந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பாரதிய கிசான் யூனியன் உள்ளிட்ட 32 விவசாய அமைப்புகளின் கூட்டமைப்பான கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் தலைநகரை முற்றுகையிட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறது. கடந்த நவ. 26ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் டெல்லி புராரி பகுதியில் 13 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும், விவசாயிகள் தூதுக்குழுவிற்கும் இடையே ஐந்தாவது முறையாக சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் தீர்வை இன்றுவரை எட்ட முடியவில்லை.

இதனிடையே, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடமி விருதுப் பெற்ற சிர்மோர் ஷைர் டாக்டர் மோகன்ஜித், பிரபல சிந்தனையாளர் டாக்டர் ஜஸ்விந்தர் சிங், நாடக ஆசிரியர் திரிபூன் ஸ்வராஜ்பீர் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது தேசிய விருதுகளைத் திருப்பி அளித்துள்ளனர். அதேபோல காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத கங்கிரஸ், திமுக, சிபிஐ, சிபிஎம், சிபிஎம்எல் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு தழுவிய பாரத் பந்த் இன்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து போராட்டங்கள் அதிகரித்துவருவதால், நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்கள் நடைபெற்றுவருவதால் இந்திய அரசின் மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக விவசாயக் குழுக்களின் தலைவர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பிரச்னையை தீர்ப்பதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அணுகுமுறையானது முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக நமது ஈ டி.வி பாரத்திடம் பேசிய சன்யூக்ட் கிசான் மோர்ச்சா அமைப்பினர், “ புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதை தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை.

விவசாயிகளுக்கும், அரசிற்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் எங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் டிசம்பர் 9 ஆம் தேதியன்று டெல்லி முழுமையாக முடக்கப்படும். அனைத்து சாலைகளும் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். சட்டங்களை திரும்பப் பெறுவதை தவிர்த்து வேறு எதையும் ஏற்க மாட்டோம்” என்றார்.

இதையும் படிங்க :மாவோயிஸ்டுகள் வைத்த ஒன்பது கண்ணி வெடிகள் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details