ஒடிசா:பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி நடந்த ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் படுகாயமடைந்தனர். கவாச் கருவி இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டிய நிலையில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து நடந்ததாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ரயில் விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. இதையடுத்து, விபத்தில் சேதமடைந்த ரயில்வே தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த ரயில் விபத்தின் தாக்கம் குறையாக நிலையில், அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நடந்து வருகின்றன.
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியில் நேற்று (ஜூன் 6) இரவு எரிவாயு ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் விரைவாக நடைபெற்றன. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், ரயில் சேவைகளிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், நேற்று (ஜூன் 6) ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொகாரோ மாவட்டத்தில் நடந்த சம்பவத்தில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நூலிழையில் விபத்திலிருந்து தப்பியது. டெல்லியிலிருந்து புவனேஸ்வர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் வந்த தண்டவாளத்தில், டிராக்டர் ஒன்று சிக்கிக் கொண்டது. இதனை கவனித்த ரயில்வே ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 7) மற்றொரு ரயில் விபத்து நடந்துள்ளது. ஜாஜ்பூரில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் ஒன்பது தொழிலாளர்கள் உறங்கியதாக தெரிகிறது. அப்போது, திடீரென சரக்கு ரயில் புறப்பட்டது.
அதில், தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியது. இந்த கோர விபத்தில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். சிதைந்த உடல்களை மீட்ட ரயில்வே துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த தொழிலாளர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிகிறது.
முன்னதாக ஒடிசாவின் பர்கர் மாவட்டத்தில் கடந்த 5ஆம் தேதி சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது. தனியார் சிமென்ட் தொழிற்சாலை வளாகத்திற்குள் அந்த தொழிற்சாலையால் இயக்கப்பட்ட சரக்கு ரயில் தடம் புரண்டதாகவும், இதற்கும் ரயில்வே துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ரயில்வே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: jharkhand train accident: நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ்.. ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் விபத்து தவிர்ப்பு!