ராஜஸ்தான்:தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு கடந்த 15ஆம் தேதி கரையைக் கடந்தது. பாகிஸ்தானின் கராச்சிக்கும் குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் இடையே இந்தப் புயல் கரையைக் கடந்தது. அப்போது, மணிக்கு 125 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. இதனால், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதன் காரணமாக, சுமார் 5,000 கிராமங்கள் இருளில் மூழ்கின. ஏராளமான குடிசை வீடுகள் சேதமடைந்தன. 24 விலங்குகள் உயிரிழந்துள்ளன. 23 பேர் காயமடைந்துள்ளனர். இந்தப் புயலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. குஜராத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குஜராத்தில் கரையைக் கடந்த பிப்பர்ஜாய் புயல், ராஜஸ்தானை நோக்கி நகர ஆரம்பித்தது. இதன் காரணமாக கடந்த 16ஆம் தேதி முதல் ராஜஸ்தானில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பிப்பர்ஜாய் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிப்பர்ஜாய் புயலின் தாக்கத்தால் இன்று(ஜூன் 18) ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சிரோஹி, உதய்பூர், ஜலோர், பார்மர், ஜோத்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. சிரோஹி மாவட்டத்தில் உள்ள மவுண்ட் அபுவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதனால், அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ஜலோர், பார்மர், சிரோஹி மற்றும் பாலி மாவட்டங்களுக்கு இன்று ஆரெஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக, பார்மர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கனமழையால், உதய்பூரில் இருந்து டெல்லி மற்றும் மும்பை செல்லும் இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கனமழையால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரோஹி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. சிரோஹி மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பவர்லால் சவுத்ரி அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: Biparjoy: பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்