தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேச பாதுகாப்புக்கு சைபர் பாதுகாப்பு முதன்மையானது - பிரதமர் மோடி பேச்சு - இந்தியாவில் இணைய பாதுகாப்பு

இணைய பாதுகாப்பு என்பது தேசப் பாதுகாப்பின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளது.

PM Modi
PM Modi

By

Published : Feb 25, 2022, 8:04 PM IST

Updated : Feb 28, 2022, 2:46 PM IST

‘பாதுகாப்புத் துறையில் தற்சார்பு-செயல்பாட்டிற்கு அழைப்பு’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த இணையவழிக் கருத்தரங்கிற்கு பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, "பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பட்ஜெட்டில் தெளிவாக தெரிகிறது. இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, நாம் அடிமைப்பட்டு இருந்த காலத்திலும் சரி, அதன்பின் சுதந்திரம் அடைந்த பிறகும் சரி, முற்றிலும் வலிமையாகவே இருந்து வந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் இரண்டாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் இருந்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான வலிமையான சூழலை உருவாக்குவதற்கான வரைபடம் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டில் 70 விழுக்காடு உள்நாட்டுத் தொழில்களுக்கு மட்டும் என ஒதுக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ.54,000 கோடி மதிப்பில் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, 4.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாதனங்களை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் பல்வேறு நிலைகளில் உள்ளது.

இணைய பாதுகாப்பு என்பது இனியும் டிஜிட்டல் உலகிற்கு மட்டும்தான் பொருந்தக்கூடியது என்றில்லாமல், தேசப் பாதுகாப்பு அம்சமாக மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் நமது வலிமை மிகுந்த ஆற்றலை, பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தினால், நமது பாதுகாப்பு விஷயத்தில் நாம் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கலாம்" என்று உரையில் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:27 நாட்டு தலைவர்களிடம் கேட்டேன்; எல்லாரும் அச்சப்படுகிறார்கள் - உக்ரைன் அதிபர் உருக்கமான உரை

Last Updated : Feb 28, 2022, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details