ஹைதராபாத்(தெலங்கானா): பாஜக எம்எல்ஏ ராஜா சிங், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியதைத்தொடர்ந்து, போலீசார் அவரை கடந்த ஆக.23ஆம் தேதி கைது செய்தனர்.
இதனிடையே பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஹைதராபாத் நகரின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பதற்றமான இடங்களான மீர் சௌக், சார்மினார், கோஷாமஹால் ஆகிய இடங்களில் விரைவு அதிரடிப்படையினரும் 360 ஆர்பிஎஃப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பரபரப்பான பகுதிகளான சந்திராயண குட்டா, சார்மினார், யாகுத்புரா, பகதூர்புரா, ஃபலக் நுமா, ஷாலிபண்டா மற்றும் மொகல்புரா, தலாப் கட்டா, ரீன் பஜார் உள்ளிட்டப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனிடையெ நேற்று (ஆக.24) ராஜா சிங்கின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷாலிபண்டா மற்றும் சைதாபாத் பகுதிகளில் காவல் துறையின் எச்சரிக்கையையும் மீறி சில போராட்டக்காரர்கள் நள்ளிரவில் சாலைகளில் இறங்கியபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
முன்னதாக, சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்தனர். அவ்வப்போது சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. போராட்டங்கள் தீவிரமடைந்ததைத்தொடர்ந்து, ஹைதராபாத்தின் பழைய நகரில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.