போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் உள்ளார். மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் உள்ள ஆர்யன் கானுக்கு அவரது குடும்பத்தினர் மணி ஆர்டர் தொகை அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் நிதின் வய்சால் கூறுகையில், ஆர்யன் கான் குடும்பத்தினர் அவரது செலவுக்காக ரூ.4,500 மணி ஆர்டர் அனுப்பியுள்ளனர். சிறை கேன்டீன் செலவுக்காக இந்த தொகையை அவர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிறைச்சாலை விதியின்படி, சிறைவாசி அதிகபட்சமாக மணி ஆர்டர் மூலம் ரூ.4,500 தான் பெற முடியும் என்றார். மும்பை அருகே சொகுசுக் கப்பலில் நடந்த போதைப் பொருள் விருந்தில் கலந்துகொண்ட போது ஆர்யன் கான் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்களால் அக்டோபர் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் நைஜீரிய நாட்டினர் இருவர் உள்பட 20 பேர் கைதாகியுள்ளனர். வழக்கில் பிணை கேட்டு ஆர்யன் கான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதன் மீதான உத்தரவு அக்டோபர் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இதையும் படிங்க:கோவிட்-19 தடுப்பூசி ஏற்றுமதி மீண்டும் தொடக்கம்