பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் மெட்ரோவில் டிக்கெட் வாங்காமல் வெளிநாட்டு யூடியூபர் ‘ஃபிடியாஸ் பனயோட்’ என்பவர் பயணம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்ற யூடியூபர் ‘ஃபிடியாஸ் பனயோட்’ டிக்கெட் எடுக்காமல் எப்படி மெட்ரோவில் பயணிப்பது என்று பார்க்கலாம் என கூறிக்கொண்டு உள்ளே நுழைகிறார்.
அப்போது, அங்கிருந்த மற்ற பயணிகளிடம் இது குறித்து தெரிவிக்க, அவர்கள் டிக்கெட் எடுக்காமல் உள்ளே செல்ல முடியாது என கூறுகின்றனர். ஆனால், தான் எப்படி செல்கிறேன் என்று பாருங்கள் என கூறிக்கொண்டு மெட்ரோ நடைமேடைக்கு சென்று டிக்கெட் ஸ்கேனரிடம் சென்று டிக்கெட்டை ஸ்கேன் செய்யாமல் அந்த ஸ்கேனரை தாண்டி செல்கிறார்.
தொடர்ந்து மெட்ரோவில் ஏறிய அந்நபர், மெட்ரோவிற்குள் உள்ள கம்பிகளில் உடற்பயிற்சி செய்துவிட்டு, தான் இறங்கும் இடம் வந்துவிட்டதாக கூறி ரயிலில் இருந்து இறங்குகிறார். பின்னர், அங்கிருந்த வெளியேறும் ஸ்கேனரிடம் சென்று முன்னதாக செய்ததுபோல ஸ்கேனரை தாண்டி வெளியே சென்று, தான் இந்தியாவில் உள்ள மெட்ரோவில் இலவசமாக பயணித்ததாக கூறிவிட்டிச் செல்கிறார்.