ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பதவியேற்பு விழா இன்று (பிப்.18) நடைபெற்றது. ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மாநில அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள், சபாநாயகர் ரவீந்திர நாத் மாடோ, பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், "ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சியே எங்களின் பிரதான நோக்கம். ஜார்க்கண்டின் ஆளுநராக பதவியேற்றதில் மகிழ்ச்சி கொள்கிறேன். அரசின் அனைத்து திட்டங்களும், மக்களை சென்றடையும் வகையில், முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன்" என கூறினார்.