கரோனா இரண்டாவது அலையின் மூர்க்கத்தனமான எழுச்சியால் தேசம் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலை மிகவும் மோசமாக இருக்கும் என்று அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து கிடைத்த அனுபவங்கள் இருந்தபோதிலும், நமது ஆட்சியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கவலைப்படவில்லை, மருத்துவ தயார்நிலையையும் கண்டுகொள்ளவில்லை. இந்த உறுதியற்ற வழிகள்தான் இந்த கரோனா இரண்டாவது அலையை மிகவும் ஆபத்தானதாக மாற்றியது.
கடந்தாண்டு இதே நேரத்தில் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடும்போது கள அளவிலான நிலைமையில் முன்னேற்றம் இருப்பதாக பிரதமர் கூறிய போதிலும், தற்போதைய மூன்று மடங்கு பாதிப்புகள, அதிக இறப்பு விகிதங்கள் போன்றவை நெருக்கடியைப் பிரதிபலிக்கின்றன. கரோனா சோதனை மையங்களின் எண்ணிக்கை 2,500 ஆக உயர்த்தப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியது.
ஆனால், அதிக நோயாளிகளின் வருகை காரணமாக தேசிய தலைநகரிலேயே இரண்டு நாட்கள் சோதனை நிறுத்தப்பட்டது என்பதே உண்மை. மருத்துவமனைப் படுக்கைகளின் பற்றாக்குறை, ஏராளமான கோவிட் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுகளின் உண்மைத்தன்மையை அம்பலப்படுத்தியது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய மரணங்கள் உண்மையிலேயே இதயத்தை பிளக்கின்றன. இந்தியா 6.6 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசியை 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. இன்று நாட்டில் சொந்த குடிமக்களுக்கு போடுவதற்கு தடுப்பூசி இல்லை. குணப்படுத்தக்கூடிய மருத்துவப் பிரச்சினைகள் காரணமாகவும், நோயாளிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று புலம்பும் இளம் மருத்துவர்களின் குரல்களில் இருந்தும் அரசாங்கங்களின் செயலற்ற தன்மை தெளிவாகிறது. 162 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்த போதிலும், அவற்றில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே உண்மையில் தொடங்கப்பட்டது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பிரதமரால் நியமிக்கப்பட்ட பணிக்குழு தனது கடமையைச் சரியாகச் செய்திருந்தால், நாடு இன்று 3 லட்சம் பாதிப்புகள், பத்து விழுக்காடு இறப்புகளுடன் வருத்தப்படாது. அரசாங்கத்தின் தற்போதைய தடுப்பூசி கொள்கையும் உறுதியளிக்கவில்லை.
உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில், 60 விழுக்காடு அளவிற்கு இந்தியா உற்பத்தி செய்கிறது. அத்தகைய நாடு தடுப்பூசி பற்றாக்குறையைச் சந்தித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. தடுப்பூசி கணிசமான அளவிற்கு கோவிட் அச்சுறுத்தலைத் தவிர்க்க முடியும் என்று மொத்த உலகமும் நம்புகிறது. தடுப்பூசி உயிரிழப்புகளைத் தடுக்கும் என்றும் மேலும் தொற்றுப் பரவாமல் தடுக்கும் என்று உலகம் நம்புகிறது.