கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் வீடுகளில் ஒட்டப்படும் போஸ்டர்கள், சமூகம் அவர்களைப் புறக்கணிக்க வழிவகுப்பதாகவும், வீடுகளில் போஸ்டர்கள் ஒட்டப்படுவது குறித்து தேசிய அளவில் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு இன்று (டிச.01) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "இந்த விதியை மத்திய அரசு பரிந்துரைக்கவில்லை. இருப்பினும், மற்றவர்களை கரோனாவில் இருந்து பாதுகாக்க இந்த நடைமுறையை சில மாநிலங்கள் பின்பற்றுகின்றன. ஒரு சிலரை மட்டும் தனிமைப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை. கரோனா பரவக்கூடாது என்பதே அரசின் நோக்கம்" என்றார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், கரோனா நோயாளிகளின் வீடுகளில் ஒட்டப்படும் போஸ்டர்களால் சுற்றியிருப்பவர்கள், அவர்களை தீண்டத்தாகதவர்களைப் போல நடத்தும் சூழ்நிலை ஏற்படுவதாக வேதனைத் தெரிவித்தனர். அப்போது துஷார் மேத்தா, போஸ்டர் ஒட்டுவதைத் தவிர்ப்பது குறித்து தேசிய அளவிலான வழிகாட்டுதல்களை வெளியிடுவது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறினார்.