டெல்லி:50 சதவீதம் மாற்றுதிறனாளியான ஆர்பிஐ வங்கி ஊழியர் ஏ.கே. நாயர் தனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் கீழ் பல வருடங்கள் கழித்து அவருக்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நாயர், ரிசர்வ் வங்கியில் உதவி மேலாளர் பதவி உயர்வு பெருவதற்கான தேர்வை எழுதி 3 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் தனக்கு கருணை மதிப்பெண் வழங்கி அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் எஸ்சி. எஸ்டி பிரிவினருக்கு இணையான இட ஒதுக்கீடு மற்றும் மாற்று திறனாளி என்ற அடிப்படையில் தனக்கு கருணை மதிப்பெண் வழங்கி பதவி உயர்வு பெற்றுதர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
நீண்ட நாட்களாக இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ் ரவீந்திர பட் மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 2006ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் ஏ.கே. நாயர் ரிட் மனுவை சமர்பித்த நாளிலிருந்து அவருக்கு சொல்வழி பதவி உயர்வையும், கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் உண்மையான பதவி உயர்வையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அப்போது பேசிய நீதிபதி தத்தா, நலிவடைந்த மற்றும் ஏழை பிரிவினருக்கு நீதி கிடைப்பதன் மூலம் அவர்களை மற்ற சமூகத்தினருடன் சமமாக நடத்த முடியும் என்பதே அடிப்படையான கருத்து என கூறினார். மேலும், பலம் வாய்ந்த பிரிவினருடன் நலிவடைந்த பிரிவினர் போட்டிபோடும்போது, சமமான 'சமூக நீதி' பெறுவதற்கான சவாலை எதிர்கொள்ள, நீதிமன்றங்கள் துணை நிற்கும் எனவும் அவர் அப்போது குறிப்பிட்டார். மேலும், அரசியல் அமைப்பு சட்டத்தின் 142-வது பிரிவை பரிந்துரைத்து ஆர்பிஐக்கு இந்த வழக்கு தொடர்பான உத்தரவை நீதிபதி வழங்கினார்.