கர்நாடகா மாநிலம் சித்ராபூராவில் வசித்து வந்தவர் ரமேஷ் குமார் (45). இவர் இன்று அதிகாலை 6 மணியளவில் மங்களூர் காவல் ஆணையரை தொலைப்பேசியில் அழைத்துள்ளார்.
அவரிடம், "நானும் எனது மனைவியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனது மனைவி குணா, ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டார். நான் இப்போது தற்கொலை செய்ய போகிறேன். எங்களுக்கு இறுதிச்சடங்கு செய்துவிடுங்கள்" எனக் கூறிவிட்டு, தொலைப்பேசி அழைப்பைத் துண்டித்துள்ளார்.
நிலைமையை உணர்ந்த ஆணையர், உடனடியாக அவரது இருப்பிடத்தை ட்ரேஸ் செய்து காவல் துறையினரை அனுப்பியுள்ளார். சம்பந்தப்பட்டவரின் வீட்டிற்கு காவல் துறையினர் செல்லும் போதே, இருவரும் உயிரிழந்த நிலையிலிருந்துள்ளனர்.
மேலும், அவரது மனைவி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிவைத்த கடிதம் காவல் துறையினருக்கு கிடைத்தது. அதில், "எனக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு உள்ளது. இந்த நோய் கடுமையானால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனது கணவருக்கு கரோனா பாதிப்பு உள்ளது. எனவே, நான் உயிரை மாய்த்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.