டெல்லி: கடந்த நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் கற்றல் அடைவு திறன் குறித்து தேசிய அளவில் மத்திய கல்வி அமைச்சகம் ஆன்லைன் மூலம் ஆய்வு நடத்தியது. இதற்காக மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக, தமிழ்நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் கடந்த ஆண்டு இந்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ்நாட்டில் உள்ள 4,145 பள்ளிகளில் 19,100 ஆசிரியர்களிடமும், 1,26,253 மாணவர்களிடம் இருந்தும், மொழிப்பாடம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியப் பாடங்களில் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் முன்னிலை: அதிலும் மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த தேர்வானது நடத்தப்பட்டுள்ளது. இதன்படி, 3ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கணித பாடத்தில் ஆயிரம் எண்கள் வரை எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை தேசிய சராசரியைக் காட்டிலும் அதிகமாகும். ஏனென்றால் தமிழ்நாடு மாணவர்களின் சராசரி 46 விழுக்காடாகவும், தேசிய சராசரி 45 விழுக்காடாகவும் உள்ளது.
மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தில் புரிந்து கொள்வதிலும் எழுதுவதிலும் சிக்கலான வார்த்தைகளை அறிந்து வைத்திருப்பதிலும் தேசிய சராசரிக்கு இணையாக உள்ளனர். அந்த வகையில் தேசிய சராசரியான 43 விழுக்காட்டை, தமிழ்நாடு மாணவர்கள் எட்டியுள்ளனர்.