நவ ராய்பூர்:சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நேற்று (பிப்.24) தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காரிய கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கிய நிலையில் கட்சியின் உயா் பதவிகளுக்குத் தோ்தல் நடத்த வேண்டுமா இல்லையா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் முடிவில், காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படாது என்றும், மல்லிகார்ஜுன் கார்கே பரிந்துரையின் பேரில் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 2வது நாளாக நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி குழுவில் முன்னாள் பிரதமர்கள், முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டவர்களை உறுப்பினர்களாக இணைக்கும் வகையில் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி 25 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டி குழு 35 உறுப்பினர்களாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.