ராய்பூர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி முடிவுகள் அன்றே வெளியாகும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்தல் வாக்குறுதிகள் கொண்ட அறிக்கை இன்று (நவ.5) வெளியிடப்பட்டது.
சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வாக்குறுதிகள் கொண்ட அறிக்கை இன்று (நவ.5) வெளியிடப்பட்டது. இதில், சாதிவாரி கணக்கெடுப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, நெல் குவிண்டாலுக்கு ரூ.3200க்கு கொள்முதல் மற்றும் புதிய திட்டத்தின் கீழ் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆளும் கட்சியாகக் காங்கிரஸ் இருந்து வருகிறது. தற்போது, சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளை 'பரோஸ் கா கோஷனா பத்ரா 2023-2028' என்ற தலைப்பில் 6 வெவ்வேறு இடங்களில் வெளியிட்டது. இதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்பூர், ராஜ்நந்த்கான், ஜக்தல்பூர், பிலாஸ்பூர், அம்பிகாபூர் மற்றும் கவர்தா ஆகிய ஆறு இடங்களில் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. ராஜ்நந்த்கான் பகுதியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும், ராய்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பாளர் குமாரி செல்ஜா வாக்குறுதிகளை வெளியிட்டனர்.