டெல்லி : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவராக உருவெடுத்து உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் மட்டுமின்றி அனைத்து எதிர்க்கட்சிகளில் சிறந்த தலைவராக ராகுல் காந்தி இருப்பதாக அவர் கூறி உள்ளார்.
கடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நாடு முழுவதும் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரைக்காக அவரை அனைவரும் பாராட்டியதாக வேணுகோபால் தெரிவித்து உள்ளார். கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி மாப்பிள்ளை அவதாரத்திற்கு தயாராக இருக்க வேண்டும் அனைத்து எதிர்க்கட்சிகளும் திருமண ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள் என அடுத்த பிரதமர் தேர்வு குறித்து மறைமுகமாக ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்ததாக கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக பீகார் முதலமைச்சரும் ஜனதா தள கட்சித் தலைவருமான நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறும் இரண்டாவது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியுடன் இணைந்து ராகுல் காந்தியும் கலந்து கொண்டு உள்ள நிலையில், அடுத்த பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிப்பதற்கான முன்னோட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.