டெல்லி:ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி, கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கவாச் கருவி இல்லாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டிய நிலையில், எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து நடந்ததாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரயில்வே துறையின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்தது என்றும், இதற்குப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே ஒடிஷா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யவிருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்வது, விஷயத்தை திசைதிருப்பும் முயற்சி என்றும் குற்றம் சாட்டின.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று(ஜூன் 5) பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ரயில்வே துறையில் மூன்று லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது என்? - ரயில் விபத்து குறித்து தென்மேற்கு ரயில்வே கடந்த பிப்ரவரி மாதமே எச்சரித்தும் அதனை அலட்சியப்படுத்தியது ஏன்? - சிஏஜி அறிக்கைப்படி பெரும்பாலான ரயில் விபத்துகள் தடம் புரள்வதால் ஏற்படுவதாக தெரியவந்தும் அது குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? - எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட கோளாறுதான் விபத்துக்கு மூலக் காரணம் என கண்டுபிடித்துவிட்டதாக கூறிய பிறகு, சிபிஐ விசாரணைக்கு எதற்கு? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த ரயில் விபத்து குறித்து என்ஐஏ விசாரணைக்கு உத்தவிட்டு அதனை நீர்த்துப்போகச் செய்ததைப் போலவே, இம்முறையும் செய்ய முயற்சிப்பதாகவும் கார்கே குற்றம் சாட்டினார்.