புதுச்சேரி: புதுச்சேரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் இந்தியப் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது, வருமானம் பெருகியுள்ளதாகக் கூறி வருகின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி காங்கிரஸ் ஆட்சியில் 9 விழுக்காடாக இருந்தது, தற்போது 6.5 விழுக்காடாக உள்ளது என உலக வங்கி கணித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது.
ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த நிறுவனம் ஒன்று உலகளவில் வறுமையில் வாடும் 120 நாடுகளின் பட்டியலில், இந்தியா 107ஆவது இடத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. நமது நாட்டில் பட்டினியால் வாடும் மக்கள் 22 கோடி பேர். ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் 33 விழுக்காடு பேர் உள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி, தென் மாநிலங்களில் உள்ள மக்கள் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி வருகின்றனர். நமக்கு முதன்மைமொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம். ஆனால், அமித் ஷா இந்தியை திணிப்பதில் குறியாக உள்ளார்.