டெல்லி :யோகாவை பிரபலப்படுத்துவதில் ஜவகர்லால் நேரு முக்கியப் பங்கு வகித்ததாகவும், தேசிய கொள்கையின் ஒரு பகுதியாக யோகாவை அவர் மாற்றியதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.
சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா பொதுச் சபையின் தலைமை அலுவலகத்தில் விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாவின் பெருமைகள் குறித்து உரையாற்றுகிறார்.
இந்த விழாவில் 180 நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், யோகாவை பிரபலப்படுத்துவதில் முன்னாள் பிரதமர் நேரு முக்கியப் பங்கு வகித்ததாகவும், அவரது ஆட்சியில் தேசிய கொள்கையின் ஒரு அங்கமாக யோகா மாற்றியதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள பதிவில், "சர்வதேச யோகா தினத்தில், யோகாவை பிரபலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய பண்டிட் நேருவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அதை தேசியக் கொள்கையின் ஒரு பகுதியாகவும் மாற்றினார். நமது உடல் மற்றும் மன நலனில் தொன்மையான கலை மற்றும் தத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பாராட்டி, அதை நம் வாழ்வில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுப்போம்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தன் ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் அரசாங்கம் உட்பட யோகாவிற்கு புத்துயிர் அளித்து பிரபலப்படுத்திய அனைவரையும் நாங்கள் அங்கீகரிக்க வேண்டும். "உண்மையில் ஐநா மூலம் சர்வதேச யோகா தினத்தை சர்வதேசமயமாக்கியதற்காக நமது அரசாங்கம், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உள்பட யோகாவை புத்துயிர் அளித்து பிரபலப்படுத்திய அனைவரையும் அங்கீகரிக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக தான் வாதிடுவது போல, யோகா உலகெங்கிலும் உள்ள மென்மையான சக்தியின் ஒரு முக்கிய பகுதி என்றும் அது அங்கீகரிக்கப்படுவதைப் பார்ப்பது மிகவும் சிறந்தது" என்றும் அவர் பதிவிட்டு உள்ளார்.
சர்வதேச அளவில் ஜூன் 21ஆம் தேதியை 9வது சர்வதேச யோகா தினமாக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா பொதுச் சபையின் தலைமை அலுவலகத்தில் பிரம்மாண்ட விழா நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஏறத்தாழ 180 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் ஏறத்தாழ 25 கோடி பேர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வசுதைவ குடும்பகம் எனப்படும் ஒரே பூமி ஒரே எதிர்காலம் ஒரே குடும்பம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த விழா கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :ஜெய்பீம் பட பாணியில் தமிழர்கள் மீது தாக்குதல் - ஆந்திர போலீஸ் மீது வழக்குப்பதிவு!