பெலகாவி:கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும், மே 10ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பெலகாவியில் நடைபெற்ற பாஜக பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அவர் உரையாற்றுகையில், காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் தான் சொந்தம். ஊழல் கறைபடிந்த அந்த கட்சியில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. ஆனால் பாஜக அரசு வளர்ச்சியை நோக்கி செயல்பட்டு வருகிறது. நாட்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்த போது மோசடிகள் மட்டுமே அரங்கேறின.
பட்டியல் சமூகம், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பெரும் இழப்பை சந்தித்தனர். ஆனால் விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காக பாஜக அரசு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. சாமானிய மக்களுக்காக இரவு, பகல் பாராமல் பாஜக உழைப்பது, காங்கிரசுக்கு பிடிக்கவில்லை. காங்கிரசின் ஒரே வேலை என்னை பற்றி அவதூறாக பேசுவது தான்.
காங்கிரஸ் நிர்வாகிகள் என்னை அவதூறாக விமர்சித்தது தொடர்பான பட்டியலை ஒரு நபர் எனக்கு அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் பார்த்தால் தற்போது வரை 91 முறை வெவ்வெறு விதங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் என்னை அவதூறாக பேசியுள்ளனர். என்னை தவறாக பேசியதற்கு பதிலாக, காங்கிரஸ் தலைமை அக்கட்சி நிர்வாகிகளை முறையாக வழிநடத்தியிருந்தால் அந்த கட்சிக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்காது. என்னை மட்டுமல்ல ஓபிசி, லிங்காயத் சமூக மக்களையும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. யாரையெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தார்களோ வரும் தேர்தலில் அவர்கள் பாடம் புகட்டுவார்கள். அம்பேத்கர், சாவர்க்கர் ஆகியோரையும் காங்கிரஸ் விமர்சிக்கிறது.
காங்கிரஸ் என்னை விமர்சிப்பதால் எனக்கு கவலையில்லை. நான் மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பேன். மக்களின் ஆசிர்வாதத்தால் என்னை விமர்சிக்கும் சொற்கள் சேற்றில் கலந்து விடும். எங்கள் மீது எவ்வளவு சேற்றை வீசிகிறீர்களோ அத்தனை தாமரைகள் மலரும். கர்நாடாகவுக்கு இரட்டை இன்ஜின் பாஜக அரசு தேவைப்படுகிறது. அப்போது தான் வளர்ச்சி பணிகளை விரைந்து எட்ட முடியும். காங்கிரசின் ஏடிஎம்மாக இருப்பதற்கு பதிலாக, மேலும் வளர்ச்சியடைய வேண்டும். அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்து, நாட்டின் முதன்மை மாநிலமாக கர்நாடகா உருவெடுக்க மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: BYJU'S : பைஜூஸ் சிஇஓ வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு - வெளிநாட்டு முதலீட்டில் முறைகேடு புகார்!