டெல்லி:பிகார் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பிகாரில் போட்டியிட்ட 70 தொகுதிகளில் 25 சதவீத தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவு இடங்களை போட்டியிட ஒதுக்கியதுதான் காரணம் என்ற பேச்சும் தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிஎல் புனியா ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக கூறுகையில், “நாங்கள் தோற்றுள்ளோம்; பொதுவாக தோல்வி அடையும்போது, மற்றவர் மீது பழியை தூக்கி போடுவது இயற்கைதான். 2015ஆம் ஆண்டு தேர்தல் பணிகளை மேற்கொண்டது போல் இம்முறை மேற்கொள்ளவில்லை என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
கடந்த தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிட்டு 27 தொகுதிகளில் வென்றிருந்தோம். இந்தத் தேர்தலில் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளோம். 2015 தேர்தலை போன்று தேர்தலை கவனித்திருந்தால், காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன். மேலும் பிகாரில் நாங்கள் தோல்வி அடைய மற்றொரு காரணமும் உள்ளது.
“இதுதான் என் கடைசி தேர்தல்”- நிதிஷ் குமாரின் பேச்சுக்கு பாஜகவின் அழுத்தம் காரணமா?
அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி தனித்து போட்டியிட்டு, மகா கூட்டணியின் வாக்குகளை பிரித்துவிட்டது. அந்தக் கட்சிகள் பிரித்த வாக்குகளால் மகா கூட்டணிக்கு இழப்பு ஏற்பட்டது. தேஜஸ்வி யாதவ்வும் பல்வேறு நிபந்தனைகளை விதிக்காமல் காங்கிரஸை ஏற்றுக் கொண்டிருந்தால், வெற்றி அதிகரித்திருக்கும். தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய்ந்து வருகிறோம். வரும் நாள்களில் வளர்ச்சியை காண்போம்” என்றார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து கூறுகையில், “பாஜகவினர் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்” என்று குற்றஞ்சாட்டினார். முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில், “பிகார் வாக்குப்பதிவில் எத்தனை முறைகேடுகளை பார்த்தோம்? கிருஷ்ணன்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 1,266 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் வீட்டுக்கு கிளம்பி விட்டார். ஆனாலும் எங்களது வேட்பாளருக்கு வெற்றிக்கான சான்றிதழ் அளிக்கப்படவில்லை. பிகாரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது” என்று கூறியிருந்தார்.
“பிகாரில் காங்கிரஸின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை”- பிஎல் புனியா இது தொடர்பாக புனியா அளித்த பதிலில், “நாங்கள் (மகா கூட்டணி) தேர்தலை சிறப்பான முறையில் சந்தித்தோம். எங்களுக்கு மக்களின் ஆதரவும் இருந்தது. பெருமளவு கூட்டம் கூடியது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் எங்களுக்கு சாதகமாக இருந்தன. ஆனாலும் நாங்கள் தோற்றுள்ளோம். வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மகா கூட்டணிக்கும் இடையே வாக்கு வித்தியாசமும் பெரிதளவில் இல்லை” என்றார்.
பிகார் மட்டுமின்றி மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. அண்மையில், ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகியதும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் அரசாங்கம் கவிழ்ந்தது. இந்நிலையில், பிகாரில் காங்கிரஸின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என பிஎல் புனியா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “குழப்பமில்லை, நிதிஷ் குமார்தான்”- சுஷில் குமார் மோடி