பெங்களூரு : கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது உணவகத்திற்கு சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தோசை சுட்டும், குழந்தைகள் உள்ளிட்டோரிடம் பேசி மகிழ்ந்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்ட மன்றத்திற்கு வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆட்சியை தக்கவைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.
ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் களத்தில் உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. ஒருபுறம் வேட்பாளர் தங்கள் அனல் பறக்கும் பிரசாரத்தை துவக்கி உள்ளனர். இதனிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தன் பிரசாரத்தை துவக்கி உள்ளார்.
மைசூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, அங்குள்ள உணவகத்திற்கு சென்றார். உணவகத்தின் சமையல் அறைக்கு சென்ற பிரியங்கா காந்தி, தோசை ஊற்றி மகிழ்ந்தார். தொடர்ந்து உணவகத்திற்கு வந்த குழந்தைகள் உள்ளிட்டோரிடம் பேசி மகிழ்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.