டெல்லி:உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம், வருகிற 2024 ஜனவரி 22 அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதற்காக இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் முக்கிய நபர்கள் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகிய இருவருக்கும் நேரில் சென்று, ராமர் கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ராமர் கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும், மேலும் சில தகவல்கள் அவர் சார்பாக பிரதிநிதியை அனுப்புவார் என தெரிவிக்கப்பட்டு வந்தது. ராமர் கோயில் திறப்பிற்குப் பின், சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால், இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் ராமர் கோயில் திறப்பில் கலந்து கொள்வது குறித்தான அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.