டெல்லி :நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் இருக்கை பகுதியில் நுழைந்து பாதுகாப்பு குளறுபடி ஏற்படுத்திய விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடர் அமளியில் ஈடுபட்டதாக மக்களவையில் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 14 எம்.பிக்கள் நடப்பு குளிர் கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல் மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று (டிச. 18) நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பாதுகாப்பு குளறுபடி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கோரி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 33 எம்.பிக்கள் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
திமுக நாடாளுமன்ற தலைவர் டி.ஆர் பாலு எம்.பி., தயாநிதி மாறன், காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் நடப்பு கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதேநேரம், சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷம் எழுப்பியதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், கே. ஜெயக்குமார், அப்துல் காலிக் ஆகியோர் முன்னுரிமை குழு அறிக்கை அளிக்கும் வரை இடை நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து. மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக 40 எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இன்று (டிச. 18) ஒரே நாளில் 73 எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மோடி தலைமையிலான ஏதேச்சதிகார அரசு ஜனநாயக நெறிமுறைகளை குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் நிலுவையில் உள்ள முக்கியமான சட்டங்களை தனிச்சையாக இயற்ற திட்டமிட்டு உள்ளதாகவும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர், "முதலில், நாடாளுமன்றத்தில் ஊடுருவல்கள் நடைபெற்று தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது மோடி அரசு, நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தை தாக்குகிறது, 47 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து, எதேச்சதிகார மோடி அரசு அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் குப்பைத் தொட்டியில் வீசுகிறது.
எங்களிடம் இரண்டு எளிய மற்றும் உண்மையான கோரிக்கைகள் உள்ளன ஒன்று, நாடாளுமன்றத்தில் உருவான பாதுகாப்பு குளறுபடி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறீக்கை அளிக்க வேண்டும், மற்றொன்று இது தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.
பிரதமர் பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கலாம், உள்துறை அமைச்சர் டிவி சேனல்களுக்கு பேட்டி அளிக்கலாம். இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறல் விடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி இல்லாத நாடாளுமன்றத்தைக் கொண்டு, மோடி அரசாங்கம் இப்போது நிலுவையில் உள்ள முக்கியமான சட்டங்களை எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்ற முடியும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க :நாடாளுமன்றத்தில் தொடர் அமளி - திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, தயாநிதி மாறன், விஜய் வசந்த் என 33 பேர் இடைநீக்கம்!