தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Union budget 2023: மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து - காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்

மத்திய பட்ஜெட் முழுவதும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது என்றும், இதில் ஏழை எளிய மக்களுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை என்றும் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

budget leader reaction
budget leader reaction

By

Published : Feb 1, 2023, 2:30 PM IST

டெல்லி: 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்ற மக்களவையில் இன்று(பிப்.1) தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதுமில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. வளர்ச்சி என்று பாஜக அரசு காண்பிக்கும் தோற்றத்திற்கும், அதன் உண்மை நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வளர்ச்சி என்று பாஜக கூறிக்கொள்ளும் அனைத்தும் உண்மையில் வீழ்ச்சிதான் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பட்ஜெட் குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், "மத்திய பட்ஜெட் சில நல்ல அறிவிப்புகள் உள்ளன, ஆனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கான அறிவிப்புகள் இல்லை. வேலைவாய்ப்பை அதிகரிக்கவோ, பணவீக்கத்தை குறைக்கவோ எந்த அறிவிப்புகளும் இல்லை. விலைவாசி உயர்வு உள்ளிட்ட சில அடிப்படையான கேள்விகளுக்கு பட்ஜெட்டில் பதில் இல்லை" என்றார்.

ஜக்கிய ஜனதா தள தலைவர் ராஜீவ் ரஞ்சன் கூறும்போது, "பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. கனவில் வருவதெல்லாம் நிஜத்தில் நடக்காது, அதுபோலத்தான் பட்ஜெட் இருக்கிறது. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்புகள் ஏதும் இல்லை" என்றார்.

காங்கிரஸ் எம்.பி கே.சுரேஷ் கூறுகையில், "இந்த பட்ஜெட் முழுவதும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான பட்ஜெட். அதானியின் தேவைகளைத்தான் இந்த பட்ஜெட் பூர்த்தி செய்கிறது, இதில் சாதாரண மக்களின் தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய், "பட்ஜெட்டில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை இவற்றிற்றிகான தீர்வு ஏதும் இல்லை. இதில் பலன்கள் எல்லாம் பெருமுதலாளிகளுக்குத்தான் உள்ளது. பணவீக்கம், விலைவாசியுடன் ஒப்பிடுகையில் வரிச்சலுகை என்பது கடலில் ஒரு துளி மழைநீர் விழுவது போன்றது" என்றார்.

பட்ஜெட் தாக்கலுக்கு சற்று முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் எம்பி ரன்தீப் சுர்ஜிவாலா, பட்ஜெட் என்பது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதோடு அதானி குழுமத்தின் வரி, வருமானம் உள்ளிட்டவை தொடர்பான தணிக்கை அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: Union Budget: 2023 - 2024 நிதிப்பற்றாக்குறை 5.9% ஆக நிர்ணயம்!

ABOUT THE AUTHOR

...view details