டெல்லி :நாடாளுமன்றத்தில் முக்கியமான விவாகாரங்கள் குறித்து ராகுல் காந்தி பேசும் போதெல்லாம் அவர் காட்டப்படாமல், சபாநாயகர் ஒம் பிர்லாவை மட்டுமே காட்டியதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்றது. மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று (ஆகஸ்ட். 8) தொடங்கிய நிலையில், காங்கிரஸ் மக்களவை துணை தலைவரும், அசாம் மாநில எம்.பியுமான கவுரவ் கோகாய், தீர்மானத்தை முன்மொழிந்து விவாதத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சார்பில் திமுக எம்.பிக்கள் டி.ஆர் பாலு, திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் விவாதம் நடத்தினர். அதேபோல் மத்திய அரசு தரப்பில் எம்.பி. நிஷிகாந்த் துபே, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் விவாதித்தனர். இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதம் இன்று (ஆகஸ்ட். 9) நடைபெற்றது.
விவாதத்தை எம்.பி. கவுரவ் கோகாய் தொடங்கி வைத்த நிலையில், மக்களவையில் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றினார். இதனிடையே, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெறும் விவாதங்கள் மற்றும் கூட்டங்களை சன்சாத் என்ற டிவி ஒளிபரப்பி வருகிறது.