இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று (மே.10) நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து சோனியா காந்தி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
’தேவையற்ற பதட்டத்தை காங்கிரஸ் விதைக்கிறது’ - ஜே.பி.நட்டா - ஜேபி நட்டா சோனியாகாந்திக்கு கடிதம்
கோவிட்-19 தொடர்பாக அச்சத்தை உருவாக்கி மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்துவதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இதற்கு பதிலடிதரும் விதமாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”இந்தியா சவாலான சூழலில் தவித்துவரும்போது காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்தப் பார்க்கிறது. பெருந்தொற்று குறித்து தேவையற்ற அச்ச உணர்வை காங்கிரஸ் மக்களிடையே உருவாக்குகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி தொடங்கி பலரும் போலியான மலிவான அரசியலை மேற்கொள்கிறார்கள்.
ஆனால் மோடி தலைமையிலான அரசோ அறிவியல் மேல் நம்பிக்கை வைத்து, முன்களப் பணியாளர்கள் துணையுடன், கூட்டாட்சி தத்துவ வழியில் கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.