டெல்லி : 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி ''இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி'' என்று அழைக்கப்படும், மேலும் கூட்டணி ஒருங்கிணைப்புக்கு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிர்கார்ஜூன கார்கே, நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனநாயகம் மற்றும், அரசியலமைப்பை காக்க மிக முக்கியமான கூட்டம் இது என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும் இன்று (ஜூலை. 18) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் ஆதரித்ததாகவும் கூறினார். எதிர்க்கட்சிகள் கூட்டணி இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி (இந்தியா) என்று அழைக்கப்படும் என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
மும்பையில் நடைபெறும் அடுத்த கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும் என்றும்; அதன் அமைப்புப் பணிகள் குறித்து இறுதி செய்யப்படும் என்றார். மேலும் மும்பையில் நடைபெற உள்ள மூன்றாவது கட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.