தும்கா: ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ள ஜமா சட்டப்பேரவை தொகுதியில் உள்ள லக்ட்ஜோரியா கிராமம் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு காரணம், இந்த கிராமத்தில் சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
ஆனால், சுமார் ஆயிரத்து 200 பேர் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. டிராக்டர் கூட செல்ல முடியாத அளவுக்கு மோசமான சாலை. இதனால் போக்குவரத்து வசதியும் அங்கு கிடையாது. அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட, நோயாளிகளை கட்டிலில் சுமந்து செல்கின்றனர். இதுவரை இந்த கிராமத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்படவில்லை. இதனால் பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். அரசின் எந்தவித வளர்ச்சித் திட்டங்களும் இந்த கிராமத்திற்கு சென்றடையவில்லை.
இதுகுறித்து அந்த கிராம மக்களிடம் கேட்டபோது, "அடிப்படை வசதிகளுக்காக நாங்கள் போராடி வருகிறோம். அரசின் திட்டங்களைப் பெறவும் முயற்சித்தோம், ஆனால் கிடைக்கவில்லை. சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட இல்லாத காரணத்தால் கடும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். அதன் உச்சமான எதிரொலி என்னவென்றால், எங்கள் கிராமத்தில் பிறக்கும் இளைஞர்கள், பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆவதில்லை. இங்கு சாலை வசதி கூட இல்லாததால், இந்த கிராமத்தில் திருமணம் செய்ய பிற கிராம மக்கள் விரும்புவது இல்லை" என்று வேதனையுடன் கூறுகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கிராமம் ஜமா சட்டப்பேரவை தொகுதியில் உள்ளது. முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஷிபு சோரன் இந்த தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரது மருமகள் சீதா சோரன் இந்த தொகுதியிலிருந்து மூன்று முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் பல முக்கிய புள்ளிகள் பிரதிநிதிகளாக இருந்த இந்த தொகுதியில்தான் லக்ட்ஜோரியா கிராமம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தனி வீட்டுக்கு ரூ.3,419 கோடி மின் கட்டணம் - அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!