புதுச்சேரிசட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை.
மார்ச் மாதம் இடைக்கால பட்ஜெட்டும், ஆகஸ்ட், செப்டம்பரில் முழு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டிலும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மார்ச் மாதம் 5 மாதச்செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஆகஸ்ட் 10ஆம் தேதி கூடுகிறது.
அன்றைய தினம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மறுநாள் நிதிப்பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் எனத்தெரிகிறது. கூட்டத்தொடர் குறைந்தபட்சம் 15 நாட்கள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது, 'புதுச்சேரியின் 15ஆவது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. அலுவல் ஆய்வுக்குழு கூடி சட்டசபை அலுவல் நாட்களை முடிவு செய்யும். முழு பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்வார். காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய தகவல் தொழில்நுட்பத்துறையுடன் பேசி வருகிறோம்.