டெல்லி : முன்னதாக கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அல்லது நிவாரணம் வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் குமார் பன்சால், ரீபக் கன்சல் ஆகிய இருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், “நாட்டில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் புதன்கிழமை (ஜூன் 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடோ அல்லது நிவாரணமோ வழங்குவதில் தாமதம் ஏன்? கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இது தொடர்பாக ஆறு வாரத்துக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அமைக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தினர். முன்னதாக இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 3 லட்சத்து 98 ஆயிரத்து 538 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் 4 லட்சமாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க : கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய திட்டம்