ஹைதராபாத்:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்தில் முதல் தேதி அல்லது மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.
ஏற்கெனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்ந்து வந்தது. கடந்த மூன்று மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.
கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்திருந்தன. இதனால் டெல்லியில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் ரூ.91.50 குறைக்கப்பட்டு, ஒரு யூனிட் ரூ.2,028 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலையை மேலும் ரூ.171.50 குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்லியில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் ரூ.1856.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை இந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விலையை ரூ.350.50, வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையை ரூ.50 ஆகவும் உயர்த்தி இருந்தன. தொடர்ந்து சிலிண்டர்கள் விலை ஏற்றப்பட்டதன் காரணத்தால் பொதுமக்கள் மிகவும் துன்பம் அடைந்தனர்.