ஜம்மு காஷ்மீர்: அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. காடோல் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே நேற்று காலை முதல் துப்பாக்கிச் சூடு நடந்து வந்தது. இந்த பயங்கரவாதிகளுக்கு எதிரான மோதலில் இந்திய ராணுவ வீரர் கர்னல் மன்பிரீத் சிங் உள்பட மூவர் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.
19 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், இந்த பயங்கரவாதிகளுடனான கடுமையான மோதலில் மன்பிரீத் சிங் உயிரிழந்தார். அவரது இறப்புச் செய்தி அவரது சொந்த ஊரான பஞ்ச்குலா மற்றும் பஞ்சாபின் மொஹாலியில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவரது உடல், மொஹாலி மாவட்டத்தில் உள்ள அவரது மூதாதையர் கிராமமான பன்ஜோரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளது.
கர்னல் மன்பிரீத் சிங்கின் தாத்தா ஷீத்தல் சிங், அவரது தந்தை மறைந்த லக்மீர் சிங் மற்றும் அவரது மாமா ரஞ்சித் சிங் ஆகிய அனைவரும் இந்திய ராணுவத்தில் மரியாதையுடன் பணியாற்றியவர்கள். அந்த வரிசையில் தான் கர்னல் மன்பிரீத் சிங் தனது ராணுவ பணியை பற்றுடன் செய்து வந்தார். மன்பிரீத் சிங்கின் தந்தை, ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார்.
தேசத்தின் பாதுகாவலரான கர்னல் மன்பிரீத் சிங், அவரது மனைவி ஜக்மீத் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தை விட்டுச் சென்றார். முன்னதாக, கர்னல் மன்பிரீத் சிங்கிற்கு காயங்கள் மட்டும் ஏற்பட்டதாக குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னரே அவரது இறப்பு குறித்த செய்தி, குடும்பத்தினருக்கு தெரியவந்தது.