லக்னோ:உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் பணிமனை அருகே உள்ள கப்ஹாதியா மேம்பாலத்தில், இன்று (பிப்.16) காலை 5.30 மணியளவில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் இரண்டு சரக்கு ரயில்களிலும் இருந்த என்ஜின் லோகோ பைலட்டுகளுக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 8 பெட்டிகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது. மேலும் இதனால் லக்னோ முதல் வாரணாசி இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து உதவி மண்டல மேஜிஸ்திரேட் சிபி பதக் கூறுகையில், “இரண்டு சரக்கு ரயில்களும் எதிரெதிர் திசையில் ஒரே தண்டவாள பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டன. இதனையடுத்து கிரேன் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது. இரண்டு சரக்கு ரயிலின் ஓட்டுநர்களும், அவர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில்வே துறையின் கீழ் உள்ள பொறியியல், செயல்பாடு மற்றும் சிக்னல் ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ள அனைத்து பணியாளர்களும் விபத்தை சரி செய்து வருகின்றனர்” என்றார். இந்த விபத்தை தொடர்ந்து சுல்தான்பூருக்கு ஃபாசியாபாத் மற்றும் பிரதாப்கார் வழியாக அனைத்து ரயில்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
மேலும் இதுதொடர்பாக சுல்தான்பூர் ரயில் நிலைய மாஸ்டர் எஸ்.எஸ்.மீனா கூறுகையில், “விபத்து குறித்த புலனாய்வு சோதனைகளுக்கு பிறகே விபத்து தொடர்பான அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த விபத்தில் 8 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக 2 சரக்கு ரயில்களின் என்ஜின்களும் சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்துக்கு பிறகு லக்னோ - வாரணாசி மற்றும் அயோத்யா - பிரயாக்ராஜ் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் யாரும் படுகாயம் அடையவில்லை” என்றார்.
இதையும் படிங்க:Godavari Express: கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து!